தோழி - 1 டிசம்பர், 2015 இதழ்

வாழ்க்கை புதிரின் கனவு ராணி!

ஐஸ்வர்யா

`புதிர் ராணி' என்று அழைக்கிறார்கள் ஐஸ்வர்யாவை. வாழ்க்கையின் சின்னச் சின்ன பிரச்னைகளின் முடிச்சுகளைக் கூட அவிழ்க்கத் தெரியாத நமக்கு, தமக்கு முன் அள்ளிக் குவிக்கிற புதிர் கட்டங்களை அனாயாசமாக அடுக்கி, அழகிய உருவத்துக்குக் கொண்டு வருகிற ஐஸ்வர்யா நிஜமான ஆச்சரியம்!

தன் தலையின் பின்னால் சுற்றுகிற ஒளிவட்டமோ, பட்டங்களாலும் பாராட்டுகளாலும் தன்னைச் சூழ்கிற கொண்டாட்டங்களோ, எதுவுமே ஐஸ்வர்யாவுக்குத் தெரியாது. அவரது கவனமெல்லாம் கலைந்து குவிந்த புதிர்களுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமே! பிரமாண்டமான புதிர்களை அலட்சியமாக அடுக்கிவிடுகிற அவருக்கு அதைத் தொடர்ந்த வெற்றிக் களிப்பெல்லாம் தெரியாது. அடுத்த புதிருக்கான தேடல் மட்டுமே அறிந்த அதிசயப் பிறவி ஐஸ்வர்யா.

34 வயது ஐஸ்வர்யா, தன்னைப் பீடித்த ஆட்டிசம் பாதிப்பைத் தாண்டியும் அதிசயிக்கச் செய்கிறார். ஆட்டிசத்தை கடந்த அவரது சாதனையில் ஐஸ்வர்யாவின் அம்மா கிரிஜா மற்றும் அப்பா ஸ்ரீராம் இருவரின் பங்கும் மகத்தானது. ஐஸ்வர்யாவின் குரலாகவும் நிழலாகவும் மாறிவிட்ட அவரது அம்மா, தன் மகளைப் பற்றிப் பேசுகிறார்.

``ஐஸு எங்களுக்கு ரெண்டாவது மகள். முதல் பொண்ணு அபிராமி. ஐஸு பிறந்து முதல் 2 வருஷம் எந்தப் பிரச்னையும் இல்லை. ரெண்டரை வயசுல கடுமையான காய்ச்சலும் ஃபிட்ஸும் வந்தது. இன்னொரு முறை ஃபிட்ஸ் வந்தா, மூளையில பிரச்னை வரலாம்னு டாக்டர்ஸ் சொல்லியிருந்தாங்க. அடுத்தடுத்து அவகிட்ட நிறைய மாற்றங்கள்... கேள்வி கேட்டா பதில் சொல்லாதது, ஒரே இடத்தை வெறிச்சுப் பார்க்கிறது, மத்த குழந்தைங்களோட விளையாடறதைத் தவிர்க்கிறது, புது மனிதர்களைப் பார்த்தா அழறதுனு மாறினா. அதுவரை ஐஸு ரொம்ப அமைதியான பொண்ணுனு நினைச்சிட்டிருந்தோம். இந்த மாற்றங்கள் எங்களுக்கு புதுசா இருந்ததால, சைக்யாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போனோம். ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறிகள்னு சொன்னப்ப, எங்களுக்கு ஆட்டிசம்னா என்னனு கூட தெரியாது. அது ஏதோ சாதாரண பிரச்னை... போகப் போக சரியாயிடும்னு நினைச்சோம். ஆனா, ஐஸுக்கு நாளுக்கு நாள் பேச்சு குறைஞ்சது.

ஏதாவது வேணும்னா சொல்லத் தெரியாம, கையைப் பிடிச்சு இழுத்துக் காட்டறது, அவ சொல்றது நமக்குப் புரியலைனா கத்தறதுனு ரொம்பவே மாறிப் போனா. மறுபடி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனபோது, அவளை ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்க்கச் சொன்னாங்க. ஸ்பெஷல் எஜுகேஷன் மூலமா அவகிட்ட நிறைய இம்ப்ரூவ்மென்ட்ஸை பார்க்கலாம்னு சொன்னதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவளுக்கு ட்ரெயினிங் கொடுத்ததைவிட நான் என்னை வளர்த்துக்கிட்டது அதிகம்னு சொல்லலாம்...'' என்கிற ஐஸ்வர்யாவின் அம்மா, மகளோடு சேர்ந்து தானும் வளர்ந்திருக்கிறார்.

``ஆட்டிசம் உள்ள குழந்தைங்களைக் கையாள அவங்க பெற்றோருக்கும் தனிப்பட்ட பயிற்சிகள் அவசியம்னு சொன்னாங்க. அதனால 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்ட்டல் ஹெல்த்'ல நானும் ஒரு கோர்ஸ்ல சேர்ந்தேன். அப்புறம் மனநலப் பிரச்னைகளால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சென்னையில இயங்கற மதுரம் நாராயணன் சென்டர்ல வேலைக்குச் சேர்ந்தேன். என் மகளைப் போலவே ஏராளமான குழந்தைங்களை அங்கே சந்திச்சேன். அவங்ககூட வேலை பார்த்த அனுபவம் இன்னும் அதிக தைரியத்தையும் பக்குவத்தையும் கொடுத்தது. இதுக்கிடையில ஐஸுவுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சது. அவளோட மூணு வயசுல ஆரம்பிச்ச மருந்துகளை இன்னிக்கு வரைக்கும் நிறுத்தலை. நானும் நம்பிக்கையை இழக்கலை. நடுவுல கொஞ்ச நாள் 'வித்யாசாகர்'ல சேர்த்தோம்.

என்னோட முழு நேரத்தையும் அவளுக்காகவே ஒதுக்கினேன். எனக்குக் கல்யாணமான புதுசுல நான் பேசவே மாட்டேன்னு என்னை எல்லாரும் திட்டியிருக்காங்க. ஐஸுவோட பிரச்னையைக் கண்டுபிடிச்சதும், திடீர்னு அவளுக்குப் பேச்சு குறைய ஆரம்பிச்சதும் நான் அவகூட நிறைய நிறைய பேச ஆரம்பிச்சேன். இப்ப என் வாய் ஓயறதே இல்லை. ஐஸுகிட்ட பேச்சு இருந்தது. ஏதோ ஒரு தடை காரணமா நடுவுல அது நின்னு போச்சுனு தெரிஞ்சு, மறுபடி அவளைப் பேச வைக்க என்னால முடிஞ்ச முயற்சிகளை எடுத்தேன். அது வீண் போகலை... ஐஸு மறுபடி பேச ஆரம்பிச்சா. அது மட்டுமில்லாம, பிரமாதமா எம்பிராய்டரிங் பண்ணக் கத்துக்கிட்டா. முத்து முத்தா தமிழ் எழுதவும், கணக்கு போடவும் கத்துக்கிட்டா. கந்த சஷ்டி கவசத்தை அடி மாறாம அப்படியே சொல்வா. தனக்குத்தானே பேசிக்கிட்டிருப்பா. அந்தப் பேச்சை உன்னிப்பா கவனிச்சா, அதுல அவளோட கடந்த கால நினைவுகள் நிறைய இருக்கறது தெரியும். அதுல சந்தோஷமும் இருக்கும்... சங்கடங்களும் இருக்கும்...'' - மகளின் சுய உரையாடலை ரசித்தபடி சொல்கிற அம்மா, அப்படியே ஐஸ்வர்யாவின் புதிர் ஈடுபாட்டுப் பின்னணி பற்றியும் தொடர்கிறார்.

``அவளுக்கு அப்போ 10 வயசிருக்கும். சாதாரண பொம்மைகளைத் தவிர்த்து, அறிவு வளர்ச்சியைத் தூண்டற மாதிரியான பொம்மைகளை வாங்கித் தரச் சொல்லி, டாக்டர்ஸ் சொல்லியிருந்தாங்க. ஒரு முறை ஒரு இடத்துல 100 துண்டுகளைக் கொண்ட ஒரு புதிர் பெட்டி, அலமாரியிலேருந்து கீழே விழுந்து சிதறினது. அவளால அதைத் தாங்கிக்க முடியலை. கீழே விழுந்து சிதறினதுல தொலைஞ்சு போன துண்டுகளைத் தேடிக் கண்டுபிடிச்சதோட, கொஞ்ச நேரத்துல எல்லாம் அந்த புதிரை பெர்ஃபெக்டா அடுக்கிட்டா. அதுதான் எங்கக் கண்களைத் திறந்தது. புதிர்கள் மேல அவளுக்கு இருந்த ஈடுபாடும் லயிப்பும் புரிஞ்சது. அடுத்து அவளுக்கு 25, 50 பீஸ் உள்ள புதிர் பெட்டிகளை வாங்கித் தந்தோம். அந்தப் பெட்டியில உள்ள படங்களைப் பார்க்காம, 20 நிமிஷங்கள்ல அதை அடுக்கிடுவா. அப்புறம் 100, 200, 500, 1000ம்னு அவளோட puzzle solving வேகம் அதிகரிக்க ஆரம்பிச்சது.

வீட்டுக்கு யார் வந்தாலும் அவளுக்கு puzzleதான் கிஃப்ட் பண்ணுவாங்க. வெளிநாட்லேருந்து யாராவது வந்தா சாக்லெட்ஸ் வேண்டாம், puzzle வாங்கிட்டு வாங்கனு சொல்லிடுவோம். உருவத்தைப் பார்க்காமலேயே, மனக் கண்களால உருவத்தை ஸ்கேன் பண்ணி, மிகச் சரியா அதே வடிவத்தைக் கொண்டு வர்ற அவளோட திறமை எங்களை வியக்க வைக்குது. 2008ல அவளோட தனித்திறமையைப் பாராட்டற வகையில வித்யாசாகர்ல அவ சால்வ்பண்ணின புதிர்களை வச்சு ஒரு கண்காட்சி நடத்தினோம். இதுவரைக்கும் 13க்கும் மேலான கண்காட்சிகள் நடத்தியிருக்கோம். 1000 பீஸ் உள்ள புதிர்கள் வரைக்கும் சர்வசாதாரணமா பண்ணிடறா. அவளுக்குத் தீனி போட எங்களுக்குத்தான் வழி தெரியலை...'' - பெருமை பூரிக்கிறது அம்மாவுக்கு!

புதிர்களைக் கோர்ப்பதில் மட்டுமின்றி, கம்ப்யூட்டரில் படங்கள் வரைவதிலும் ஐஸ்வர்யா அசத்துகிறார். இவரது புதிர்களையும் ஓவியங்களையும் வைத்து வருடம் தோறும் அவரது அப்பா காலண்டர் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இசையிலும் ஆர்வம் கொண்டிருக்கிற ஐஸ்வர்யாவுக்கு வாரந்தோறும் மியூசிக் தெரபியின் மூலமும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐஸ்வர்யாவை ஹீரோயினாக வைத்து, அவரது ஆசிரியர் லட்சுமி மோகன், `பீச்... பீட்டர் சார்... லாலி பாப்' என்கிற நாவலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

``எங்களைப் பொறுத்தவரை ஐஸு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான். இந்த மாதிரிக் குழந்தைகளை வளர்க்கறதை சங்கடமாவோ, சவாலாகவோ நினைக்காம, அவங்களை சாதனையாளர்களா உருவாக்குகிற சுவாரஸ்யமான பயணமா நினைச்சு ஏத்துக்கிட்டா போதும்.

எல்லா அம்மா, அப்பாவையும் போல எங்க காலத்துக்குப் பிறகு ஐஸுவோட நிலைமை என்னங்கிற கேள்வி எங்களுக்கும் உண்டு. அவளோட வேலைகளை அவளே பார்த்துக்கிற மாதிரி சிலதைப் பழக்கியிருக்கோம். காலையில எழுந்ததும் அவளே அன்னிக்குச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்குவா. மைக்ரோவேவ் அவன்ல வச்சு எடுக்கத் தெரியும். வாஷிங் மெஷின்ல துணிகளைப் போட்டு ஆன் பண்ணத் தெரியும். அப்புறம் சைக்கிளிங்... வாக்கிங்னு எக்சர்சைஸ்... சாதாரணமா இருக்கிற நாமளாவது நம்ம வேலைகளை சில நாட்கள் செய்யாமத் தவிர்ப்போம். ஆனா, ஐஸு இந்த வேலைகளை ஒருநாள்கூட மிஸ் பண்ண மாட்டா. அவ்ளோ பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்...'' - அம்மாவை இடைமறித்து, விளக்கேற்றும் நேரம் வந்துவிட்டதை நினைவுபடுத்தி, பூஜை அறைக்குச் செல்வதிலேயே தெரிகிறது ஐஸுவின் பெர்ஃபெக்‌ஷன்!

அச்சுக் கோர்த்தது போன்ற அழகான கையெழுத்தில், பென்சிலால் தினமும் டைரி எழுதும் பழக்கம் உண்டு ஐஸ்வர்யாவுக்கு. மாதிரிக்கு அதில் இருந்து சில பக்கங்களை நமக்குக் காட்டுகிறார் ஐஸ்வர்யாவின் அம்மா. நிஜங்களும் நிகழ்வுகளுமாக கனவுகளும் கற்பனைகளுமாக ஐஸ்வர்யாவின் உலகம் அதில் அவ்வளவு அழகாக விரிந்து பரந்திருப்பதை உணர முடிகிறது.


Copyright © www.aishyspuzzles.com. All Rights Reserved. Powered by ICKON